நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்
கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், முழு மனதுடன் நான் காதலிக்கும் இந்த விளையாட்டை விளையாடுவதும், அதே விளையாட்டின் மூலம் என் நாட்டுக்குச் சேவை செய்வதும் பெருமையாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இதுவரை நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்னை நம்பி வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இந்த 10 ஆண்டுகள் வெறும் தொடக்கமே...இப்போது தான் என்னுடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது. சிறுவயதில் பரோடாவிலிருந்து விளையாட கூடுதல் தூரம் ஓடிய இளம் ஹர்திக்கை நான் நினைத்து பார்க்கிறேன். ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சி செய்யாதப் பவுலர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் 19 வயதில் ஒரு ஆல்ரவுண்டரானார். கவனிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து, என் தேசத்திற்காக விளையாடுவதுதான் எனக்கு மிகவும் மதிப்புமிக்க பயணம் என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
VIT: வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி!
வேலூர் மாவட்டக் காவல்துறை மற்றும் வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் மின்னொளி கையுந்துப் போட்டி வேலூர் காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 50,000, 30,000, 20,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது. இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது. ஜனவரி 19 முதல் நாளன்று துவக்க நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகிக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்க மாவட்ட தலைவர் தியாகசந்தன், செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வேலூர் பெருமுகை அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பனிமலர் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் அணியும், இரண்டாம் இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தன.

23 C