SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!

சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் குள்ளநரி: வனஉயிரின் பாதுகாப்பு சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் இடம்பெற்று, புலி மற்றும் சிறுத்தை போன்ற உயர் பாதுகாப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், குள்ளநரிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்விட இழப்பு, நகர்மயமாக்கல், தெருநாய்களுடனான போட்டி, நோய்ப் பரவல் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை இவற்றின் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் குறைத்துள்ளன. சூழலியல் முக்கியத்துவம்: மாவட்ட வனஅலுவலர் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையின்படி, குள்ளநரி ஒரு முக்கிய துப்புரவாளனாகவும், உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுபவராகவும் செயல்படுகிறது. மயில்கள், எலிகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குள்ளநரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம்: விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் கார்ட் அண்ணா/கார்ட் அக்கா திட்டத்தின் கீழ் வனக்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். கல்லூரிகளுக்கு வன அலுவலர்கள் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவர்களின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்ய, பறவைகள் கணக்கெடுப்பு, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு, குள்ளநரி கணக்கெடுப்பு போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். மரக்கன்றுகள் உற்பத்தி, மருத்துவத் தோட்டம் அமைத்தல் போன்ற நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்படும். Golden Jackal Ambassador திட்டம்: பள்ளி மற்றும் கல்லூரிகளில் Golden Jackal Ambassador (குள்ளநரி தூதுவர்கள்) திட்டம் செயல்படுத்தப்படும். கிராம வனக்குழுக்களின் பங்கு வலுப்படுத்தப்படும். காடு-சாலை சந்திப்புகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் (Wildlife Crossing) அமைக்கப்படும். குள்ளநரி தெருநாய்களுக்கு தடுப்பூசி திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, இறைச்சி கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அடுத்த தலைமுறைக்கான பொறுப்பு: பசுமையான சூழலும் சுத்தமான இயற்கையும் அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டிய சிறந்த பரிசு என்று மாவட்ட வனஅலுவலர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான உலகை உருவாக்க முடியும். பாதிக்கப்பட்ட குள்ளநரிகளை பாதுகாப்பான சூழல் பகுதிகளில் மீள்விடுதல், கிராமப்புற மக்கள் மூலம் தகவல் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் 25 Dec 2025 1:42 pm